

அகர்தலா,
60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுரா மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்று 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சிக்கு முடிவு கட்டியது. இந்த தேர்தலில் பா.ஜனதா மட்டும் 35 தொகுதிகளில் வென்றது. அதன் கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் சுய முன்னணி 8 இடங்களில் வெற்றி கண்டது.
இதைத்தொடர்ந்து பனமாலிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற மாநில பா.ஜனதா தலைவர் பிப்லாப் குமார் தேவ் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அகர்தலாவில் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவர் மாநிலத்தின் 10-வது முதல்-மந்திரி ஆவார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜனதா தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
46 வயது பிப்லாப் குமார் தேவுக்கு மாநில கவர்னர் ததகதா ராய் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்-மந்திரியாக மன்னர் குடும்ப வாரிசும், பழங்குடியின தலைவருமான ஜிஸ்னு தேவ் வர்மா பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து 7 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய நாள் திரிபுராவில் தீபாவளி கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
திரிபுரா மக்களின் கனவும் இந்தியாவின் கனவும் ஒன்றுதான். இன்று திரிபுராவின் வளர்ச்சி விளக்கின் சுவிட்ச் இங்கே போடப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான அரசு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனுபவசாலிகள். என்றபோதிலும் கூட பா.ஜனதாவின் சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவர்கள் புத்துணர்ச்சி கொண்டவர்கள். முதல்-மந்திரி பிப்லாப் குமார் இளமையும், திறமையும் கொண்டவர். மாநிலத்தை ஆட்சி செய்த இடது சாரிகளின் ஒத்துழைப்பும் மாநில அரசுக்கு தேவை. இந்த இரண்டும் ஒன்றாக இணைந்து திரிபுராவை மிகவும் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்ல உதவும்.
வடக்கு கிழக்கு மாநிலத்துக்கு நான் 25 முறை வந்திருக்கிறேன். வளர்ச்சி, சிறந்த ஆளுமை, மக்களின் பங்களிப்பு ஆகிய மூன்றும் மாநிலத்துக்கு மிகவும் முக்கியமானது. இந்த அரசு கட்சிக்கானது அல்ல. அனைவருக்கும் உரியது. மத்திய அரசின் ஒத்துழைப்பு திரிபுரா அரசுக்கு எப்போதும் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பிரதமர் மோடியை மாணிக் சர்க்கார் கைகுலுக்கியதும், பின்னர் நிகழ்ச்சி முடிந்து அவரை பிரதமர் வழியனுப்பி வைத்ததும் பதவியேற்பு விழாவின் சிறப்பம்சமாக இருந்தது.
இந்த விழாவில் மாணிக் சர்க்கார் தவிர, வேறு எந்த இடது சாரி தலைவர்களும் பங்கேற்கவில்லை.