கர்நாடகத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கர்நாடகத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 5,728 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதற்கு 2 கட்டமாக 22 மற்றும் 27-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 30 மாவட்டங்களில் 117 தாலுகாக்களில் 3,019 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 48 ஆயிரத்து 48 பதவிகளுக்கு முதல் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 1 லட்சத்து 17 ஆயிரத்து 383 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 4,377 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதனால் 43 ஆயிரத்து 238 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் இந்த முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 45 ஆயிரத்து 128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 70 ஆயிரத்து 268 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. பீதர் மாவட்டத்தில் மட்டும் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உடல் கவச உடையுடன் வந்து வாக்களிக்க வசதியாக கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்களித்துவிட்டு சென்ற பிறகு, அந்த வாக்குச்சாவடி மையங்கள், சானிடைசர் கொண்டு தூய்மைப்படுத்தப்படும். அந்த நேரத்தில் வாக்குச்சாவடிகளில் உள்ளவர்கள் கவச உடை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com