முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்

வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் முதல்கட்ட பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மக்கள் தொகை பதிவாளர் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார்.
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2021-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு எடுத்திருக்க வேண்டும்.ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த கணக்கெடுப்பு வருகிற 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.இது நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். அதேநேரம் நாடு விடுதலை அடைந்தபின் மேற்கொள்ளப்படும் 8-வது நடவடிக்கை இதுவாகும்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி முதலில் வீட்டுப்பட்டியல் தயாரிப்பும், அடுத்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஆகும்.இதில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி குறித்த தகவல் சேகரிப்பு அடங்கிய முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக இந்திய மக்கள் தொகை பதிவாளர் ஜெனரல் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்து உள்ளார்.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த தகவல்களை அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கு பணிப்பகிர்வு ஆகியவை அளிக்கப்படும் என்றும் தனது கடிதத்தில் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல்கட்ட வீட்டுப்பட்டியல் தயாரிப்பு மற்றும் வீட்டுவசதி குறித்த கணக்கெடுப்பில் குடும்பத்தினரின் வீட்டின் நிலைமை, சொத்து மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். அடுத்ததாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கை, சமூக-பொருளாதார, கலாசார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.

இந்த 2-ம் கட்ட பணிகள் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி விவரங்களும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது.மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்களும் மற்றும் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள் இந்த கணக்கெடுப்பு செல்போன் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்புக்காக சுமார் 36 கேள்விகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக செல்போன், இணையதளம், வாகனங்கள் (சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், ஜீப், வேன்) மற்றும் உபகரணங்களின் (ரேடியோ, டி.வி., டிரான்சிஸ்டர்) உள்ளிட்டவையின் உரிமை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.மேலும் தானிய நுகர்வு, குடிநீர் மற்றும் விளக்கு ஆதாரம், கழிவறை வகை, கழிவுநீர் வெளியேற்றம், குளியலறை, சமையலறை வசதிகள், அடுப்புக்கான எரிபொருள் மற்றும் கியாஸ் இணைப்பு போன்றவை குறித்தும் கேள்விகள் கேட்கப்படும்.

இவற்றை தவிர தரை, சுவர், கூரையின் வகை, அதன் நிலை, அங்கத்தினர் எண்ணிக்கை, அறை எண்ணிக்கை, திருமணமான தம்பதிகள் இருப்பு, பெண் தலைமையிலான குடும்பமா? எஸ்.சி. அல்லது எஸ்.டி. குடும்பமா? என்பன போன்ற விவரங்களும் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com