கேரளத்தில் மீன்பிடி தடை காலம் நாளை முதல் தொடங்குகிறது

நாளை முதல் ஜூலை 31-ந் தேதி வரை என 52 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது.
தடை காலம்
Published on

பெரும்பாவூர்,

கேரளத்தில் மழை காலத்தில் மீன் வளத்தை பாதுகாக்கவும். மீன் பிடிக்கும் தொழிலை பாதுகாக்கவும் ஆண்டுதோறும் மீன்படி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மீன்கள் இனப்பெருக்கம்

கடலின் ஆழமான பகுதியில் இருந்து மீன் பிடித்தலை தடுப்பதற்காகவும், மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம், அரபி கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்கு முக்கியமான காலகட்டமாகும். இதை கருத்தில் கொண்டு கேரளம் மாநிலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஜூலை 31-ந் தேதி வரை என 52 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது. இந்த நாட்களில் எந்திர படகுகள் மூலம் சிறிய வலைகளை பயன்படுத்தி, மீன் குஞ்சுகள், தாய் மீன்கள் பிடிக்கப்படுவதை தடுப்பதே முக்கிய நோக்கம்.

எந்திர படகுகள்

அதே நேரத்தில் சிறிய படகுகள், நாட்டு படகுகள் மூலம் பாரம்பரியமாக மீன் பிடிக்க தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 12 கடல் மைல் தூரம் வரை மீன் பிடிக்கலாம். மழை காலத்தில் கடல் எல்லையில் இருந்து 12 கடல் மைல் தூரம் வரை மீன்கள் முட்டையிட்டு பெருகும். இந்த சமயத்தில் மீன்களை பாதுகாக்க வேண்டி, எந்திர படகுகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த பகுதியில் சிறிய படகுகளில் மீன் பிடிக்கலாம். பெரிய எந்திர படகுகளை பயன்படுத்தி கடலின் அடிப்பகுதியில் மீன்கள் பிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், கடலில் மீன்கள் இனப்பெருக்கம் தங்கு தடை இன்றி நடைபெற்று மீன் வளம் பெருகி கடல் சார்ந்த பொருளாதாரம் பாதுகாக்கப்படுகிறது. அதே நேரத்தில் மீன் பிடிக்கும் அளவு குறைவதால். மீன்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் எந்திர படகுகள், வலைகளை சரிசெய்வது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com