

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்திகுளங்கரை பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு மீனவர்கள் மீன்பிடிக்க படகில் புறப்பட்டுள்ளனர். படகில் 11 மீனவர்கள் பயணித்தனர்.
இந்நிலையில், கேரளாவில் இருந்து 120 நாட்டிகல் மைல் தொலைவில் நேற்று இரவு மீன்பிடி படகு சென்றுகொண்டிருந்தது. அப்போது நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த வெளிநாட்டு கப்பல் மீது மீன்பிடி படகு மோதியது. இந்த விபத்தில் படகு உடனடியாக கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் 11 பேரும் கடலில் தத்தளித்தனர்.
இதையடுத்து, மோதிய வெளிநாட்டு கப்பலில் பயணித்த மாலுமிகள் கடலில் தத்தளித்த மீனவர்களில் 9 பேரை மீட்டனர். ஆனாலும், கடலில் மூழ்கிய 2 மீனவர்கள் மாயமாகினர். இந்த சம்பவம் குறித்து இந்திய கடற்படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 9 மீனவர்களையும் கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துவர கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கடலில் மூழ்கி மாயமான எஞ்சிய 2 மீனவர்களை தேடும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான மீன்பிடி படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.