

பெங்களூரு,
இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட், ஆன்லைன் உணவு டெலிவரி சேவையிலும் களமிறங்கத் தயாராகி வருகிறது. இந்த சேவையை அடுத்த 30 நாட்களுக்குள் பெங்களூருவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உணவு டெலிவரி சேவையை பிளிப்கார்ட்டின் தற்போதைய பிரதான செயலி மூலமும், இதற்காக உருவாக்கப்படும் புதிய செயலி மூலமும் வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சோதனை கட்டத்தில் வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் தற்போது ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில், பிளிப்கார்ட்டின் வருகையால் போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்புள்ள சேவையை வழங்க முடிந்தால், தாமதமாக வந்தாலும் சந்தையில் இடம்பிடிக்க முடியும் என்று பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.