

ரபேல் போர் விமானம் வாங்கும் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நேரடி தலையீடு இருந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் பிரான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டை பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எதிர்த்தனர் என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. இது மீண்டும் மத்திய அரசியலில் ரபேல் விவகாரத்தை உயிர்ப்பெற செய்து உள்ளது. காங்கிரஸ் விமர்சனத்தையும், பா.ஜனதா மறுப்பையும் தெரிவித்து வருகிறது.
இச்செய்தியை குறிப்பிட்டு ரபேல் ஒப்பந்தத்தில் காவலாளி தான் திருடன் என்பது நிரூபணம் ஆகிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய நிர்மலா சீத்தாராமன், ரபேல் ஒப்பந்த விவகாரத்தை மீடியா தகவலின்படி எழுப்புவது இறந்த குதிரையை சாட்டையை கொண்டு அடிப்பது போன்றது, என கூறியுள்ளார். அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ராகுல் விமர்சனம் செய்வதை, இது மிகவும் ஆபத்தானது, பாதுகாப்பு படைகளை உடைக்க முயற்சி செய்து வருகிறாரா? என கேள்வியை எழுப்பியுள்ளார் நிர்மலா சீத்தாராமன்.