அசாமில் வெள்ளம்; பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு

அசாமில் வெள்ளத்திற்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகையை ரூ.9 லட்சம் என்ற அளவில் உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.
அசாமில் வெள்ளம்; பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு
Published on

கவுகாத்தி

அசாமில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்வடைந்து உள்ளது.

அசாமில் பருவமழையை முன்னிட்டு அது தொடர்பான சம்பவங்களில் சிக்கி 68 பேர் வரை பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் நசீரா வருவாய் வட்டத்தில் 7 பேர் பலியானார்கள். இதனால், இந்த பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வடைந்து உள்ளது. 3.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ரூ.9 லட்சம் இழப்பீடு

கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், திப்ரூகர், ஜோர்ஹட், பிஸ்வநாத், சராய்தியோ, நல்பாரி, பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதல்குரி, கோலாகாட், கர்பி அங்லோங் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 600-க்கும் மேற்பட்ட கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அரசு சார்பில் 200-க்கும் கூடுதலான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகையை ரூ.9 லட்சம் என்ற அளவில் உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

ஒரு மாத சம்பளம்

அசாம் சட்டசபையின் சபாநாயகர் ரன்ஜீத் குமார் தாஸ், துணை சபாநாயகர் ஹேப்பி தெரான் இருவரும் வெள்ள நிவாரணத்திற்காக ஒரு மாத சம்பள தொகையை நன்கொடையாக கொடுக்க உள்ளனர். சட்டசபை செயலக பணியாளர்கள் அனைவரும் ஒரு நாள் சம்பள தொகையை நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக வழங்க உள்ளனர்.

இதனை வரவேற்று, பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரு மாத சம்பள தொகையை நன்கொடையாக அளிக்க முன் வந்துள்ளன. இதேபோன்று காங்கிரஸ் கட்சி, ஏ.ஐ.யூ.டி.எப்., ஏ.ஜி.பி., பி.பி.எப். கட்சியினரும் இதற்கு ஒப்பு கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com