ஐ.ஐ.எம். ஆமதாபாத்தை தொடர்ந்து ஐ.ஐ.டி. புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

ஐ.ஐ.எம். ஆமதாபாத்தை தொடர்ந்து ஐ.ஐ.டி. புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.எம். ஆமதாபாத்தை தொடர்ந்து ஐ.ஐ.டி. புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.40 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள ஐ.ஐ.டி. புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிக்கப்பட்ட 10 மாணவர்களும் ஐ.ஐ.டி.யில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் அடங்கிய அடுத்த குழுவின் வருகை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்பு கொரோனாவில் இருந்து ஐ.ஐ.டி. வளாகம் விடுபட்டு உள்ளது. ஒரு சிலர் தனிமைப்படுத்தும் முகாமில் உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து ஐ.ஐ.டி.க்கு திரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பின்னர் 15 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலிலும் மாணவர்கள் வைக்கப்படுகின்றனர்.

இந்த கட்டாய தனிமைப்படுத்துதலில் மாணவர்களின் உடல்நலன் கவனிக்கப்படுவதுடன், தனிமைப்படுத்திய மாணவருக்கு உணவும் வழங்கப்படுகிறது. முதலில் வந்த 3 குழுக்களில் யாருக்கும் பதிப்பு இல்லை என தெரிவித்து உள்ளது. 4வது வந்த மாணவர் குழுவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தெரிய வந்தது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் ஒருவர் உள்பட 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று, காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையத்தின் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டில் இருந்து அனைத்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளும் ஆன்லைன் வழியே நடந்து வருகின்றன. ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வளாகத்திற்குள் வசிக்கும் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை வழிகாட்டி நெறிமுறைகளை அவ்வப்பொழுது பகிர்ந்து வருகிறோம் என கல்வி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஐ.ஐ.எம். ஆமதாபாத்தை தொடர்ந்து ஐ.ஐ.டி. புவனேஸ்வரிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com