அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் - முதல் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

பிரதமர் மோடி தலைமையில் முதல் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் - முதல் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
Published on

புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணியின் 2-வது மந்திரிசபை நேற்று முன்தினம் பதவி ஏற்றது. மோடியுடன் 24 கேபினட் மந்திரிகளும், 33 ராஜாங்க மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

பதவி ஏற்ற 22 மணி நேரத்துக்குள் பிரதமர் மோடி, தனது மந்திரிசபையின் முதல் கூட்டத்தை டெல்லியில் சவுத் பிளாக் அலுவலகத்தில் நேற்று கூட்டினார்.

அவரது வலது புறம் புதிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், இடதுபுறம் உள்துறையின் புதிய மந்திரி அமித் ஷாவும் அமர்ந்து இருந்தனர். பிற மந்திரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல் முடிவாக, தேசிய பாதுகாப்பு நிதியத்தின் கீழ்வரும், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மாற்றி அமைக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

போரில், பயங்கரவாத தாக்குதல்களில் வீர மரணம் அடைகிற படை வீரர்களது குழந்தைகளின் தொழில்நுட்ப படிப்பு மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை உயர்த்தப்படுகிறது.

போர் வீரர்களின் மகன்களுக்கான கல்வி உதவித்தொகை மாதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், மகள்களுக்கான கல்வி உதவித்தொகை மாதம் ரூ.2 ஆயிரத்து 250-ல் இருந்து, ரூ.3 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், இந்த திட்டமானது பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்படுகிற போலீஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இந்த பிரிவில் 500 குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய உள்துறை அமைச்சகம் இணைந்து செயல்படும்.

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டது.

இதுபற்றி விளக்கிய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறும்போது, நிலம் உள்ள அனைத்து தகுதியான விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய மந்திரிசபை அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் 14.5 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள். இதற்காக ஆண்டுக்கு ரூ.87 ஆயிரம் கோடி செலவாகும். பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள மிகப்பெரிய வாக்குறுதியை நிறைவேற்றும் முக்கியமான முடிவாக இது கருதப்படுகிறது என்றார்.

முந்தைய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள் நல உதவி திட்டம் அறிவிக்கப்பட்டு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் 12 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே 3.11 கோடி பேர் முதல் தவணையும், 2.75 கோடி விவசாயிகள் 2-வது தவணையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டமாக 5 கோடி விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.10,774 கோடி ஒதுக்கப்பட்டது. 3 கோடி சில்லரை வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய்களை கட்டுப் படுத்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற ஒரு முடிவும் மந்திரிசபையில் எடுக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி, நாட்டின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com