டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் பேருந்துகளுக்கு போலீசார் யாரும் தீ வைக்கவில்லை -காவல்துறை மறுப்பு

மாணவர்கள் போராட்டத்தின்போது பேருந்துகளுக்கு போலீசார் யாரும் தீ வைக்கவில்லை என்றும், அவர்கள் தீயை அணைக்க மட்டுமே முயன்றதாகவும் டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.
டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் பேருந்துகளுக்கு போலீசார் யாரும் தீ வைக்கவில்லை -காவல்துறை மறுப்பு
Published on

புதுடெல்லி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதால் போராட்டம் வெடித்தது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, இரண்டு பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும், இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. ஒரே நாளில் டெல்லி போர்க்களமாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஒன்றில், அடித்து நொறுக்கப்பட்ட டெல்லி அரசு பேருந்து மீது கேனில் இருந்து பேருந்தின் சீட்டை நோக்கி ஏதோ ஒன்றை ஒரு போலீஸ்காரர் ஊற்றுகிறார். இதை குறிப்பிட்டு சிலர் பாருங்கள் போலீஸ்காரர்கள் தான் பெட்ரோல் ஊற்றுகிறார்கள். அவர்கள் தான் பேருந்து எரிக்கப்பட காரணம் என்ற ரீதியில் டுவிட்டரில் கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் போலீசார் கலவரத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்து கேள்வி எழுப்பி இருந்தார். அவர் தனது பதிவில். "இந்த புகைப்படத்தைப் பாருங்கள் ... பேருந்துகள் மற்றும் கார்களுக்கு யார் தீ வைக்கிறார்கள் என்று பாருங்கள் ... இந்த புகைப்படம் பாஜகவின் பரிதாப அரசியலுக்கு மிகப்பெரிய சான்று ... இதற்கு பாஜக தலைவர்கள் பதிலளிக்க முடியுமா? "என்று சிசோடியா இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

இந்த நிலையில், தலைநகரில் நேற்று நடைபெற்ற, போராட்டத்தின்போது, பேருந்துகளுக்கு போலீசார் யாரும் தீ வைக்கவில்லை என்றும், அவர்கள் தீயை அணைக்க மட்டுமே முயன்றதாகவும் டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.

டெல்லி பெருநகர காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி ராந்தாவா, அந்த சம்பவத்தின் முழு வீடியோவையும் தயவு செய்து அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பேருந்திற்கு வெளிப்புறத்தில் தீப்பற்றி எரிவதையும், அதனை போலீசார் தண்ணீர் ஊற்றி அணைப்பதையும் காணலாம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com