கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடனடியாக உதவிகளை வழங்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடனடியாக உதவிகளை வழங்க மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடனடியாக உதவிகளை வழங்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் கவுரவ் அகர்வால் ஆஜராகி, கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிய வேண்டும். குறிப்பாக, பெற்றோரை இழந்த பெண்குழந்தைகளை கடத்தும் நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசுகள் செய்திட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்து, இவை தொடர்பான வாதங்களை முன்வைத்தார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, இந்த ஆணையத்தின் பால் ஸ்வராஜ் இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. அதில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் உரிய விவரங்களை பதிவேற்றம் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது. மே 29-ந் தேதிக்குள் இந்த விவரங்களை பதிவேற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:-

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரம், பெற்றோரின் இறப்புக்கு காரணம், பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாநில அரசுகள் மே 30-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மட்டும் மே 31-ந் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

மாநில அரசுகளிடம் இருந்து பெறப்படும் பதில்கள், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் பதில், மத்திய அரசின் பதில் ஆகியவற்றை, கோட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள வக்கீல் கவுரவ் அகர்வால் ஒருங்கிணைத்து மே 31-ந் தேதி மாலைக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு மார்ச்சுக்கு பிறகு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் பால் ஸ்வராஜ் இணையதளத்தில் நாளைக்குள் (இன்றைக்குள்) பதிவேற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடுகிறோம்.

பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு காத்திராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடுகிறோம்.வழக்கு விசாரணையை ஜூன் 1-ந் தேதிக்குத் தள்ளிவைக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com