

முறைகேடு புகார்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராமஜென்மபூமி இருக்கும் இடத்தின் அருகே நிலம் வாங்கியதில் ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை மிகப்பெரிய முறைகேடு செய்து இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. சஞ்சய் சிங், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் மந்திரி பவான் பாண்டே ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.18 கோடியே 50 லட்சம் விலை கொடுத்து அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் வாங்கினார் என்று தெரிவித்து உள்ளனர்.இது பணமோசடி என்பதால் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் மறுத்துள்ளார்.இந்த விவகாரத்தை பா.ஜனதாவின் பழைய நட்பு கட்சியான சிவசேனா கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தெளிவுபடுத்த வேண்டும்...
ஆம் ஆத்மி கட்சி ராஜ்ய சபா எம்.பி. சஞ்சய் சிங் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ராமர் கோவில் கட்டுவதில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்து அவர் வெளியிட்ட சான்றுகள் அதிர்ச்சி அளிக்கிறது.ராமர் பகவானும், ராமர் கோவிலுக்கான போராட்டமும் எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால் இது ஒரு சிலருக்கு அரசியல் விஷயம்.கோவில் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது பொய்யா என்பதை அந்த அறக்கட்டளை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்துகொண்ட உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
முந்தைய கோரிக்கை
ராமர் கோவில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் நன்கொடைகளை வழங்கியுள்ளனர். சிவசேனா கூட அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி பங்களித்து உள்ளது. நம்பிக்கையின் பேரில் சேகரிக்கப்பட்ட பணம் தவறாக பயன்படுத்தப்பட்டால் அந்த நம்பிக்கைக்கான பயன் என்ன? என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ராமர் கோவில் கட்டும் போராட்டத்தில் சேனா பங்கேற்றதால் சிவசேனா போன்ற கட்சியின் பிரதிநிதிகளையும் கோவில் அறக்கட்டளையில் இணைக்க வேண்டும் என்பதே எங்களின் முந்தைய கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.