பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை புதிய வேளாண் சட்டங்களுக்கு நிதிஷ் குமார் ஆதரவு பிரதமரை சந்தித்தபின் பேட்டி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும், இது தொடர்பாக நீடித்து வரும் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாகவும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை புதிய வேளாண் சட்டங்களுக்கு நிதிஷ் குமார் ஆதரவு பிரதமரை சந்தித்தபின் பேட்டி
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனவே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளனர். அந்தவகையில் ரெயில் மறியல், சுங்கச்சாவடி முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவருமான நிதிஷ் குமார் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கடந்த நவம்பர் மாதம் பீகாரில் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றபின் முதல் முறையாக பிரதமர் மோடியை அவர் சந்தித்தார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும், பிரதமருடன் பல்வேறு பிரசச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும் பின்னர் செய்தியாளர்களிடம் நிதிஷ் குமார் கூறினார். அப்போது அவரிடம், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அவரது நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. அவை விவசாயிகளுக்கு எதிரானவை அல்ல. இந்த பிரச்சினையில் எங்கள் கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மத்திய அரசு சரியான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளது. அதன் மூலம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன். இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com