சசிகலாவுக்கு, தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை - மருத்துவமனை நிர்வாகம்

சசிகலாவுக்கு, தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக விடுதலை தினத்தை எதிர்நோக்கி காத்திருந்த சசிகலாவுக்கு கடந்த 20-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் ஆக்சிஜனை சுயமாக சுவாசிக்க தொடங்கியுள்ளார். செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டது. அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த சூழலில் சிறை தண்டனையின் கடைசி நாளான நேற்று, அவரை விடுதலை செய்ய பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை தலைமை சூப்பிரண்டு கேசவமூர்த்தி, சூப்பிரண்டு லதா உள்ளிட்ட அதிகாரிகள் காலை 9.30 மணியளவில் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்த விடுதலை ஆவணங்களில் சசிகலாவிடம் கையெழுத்து பெற்றனர்.

16 ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஆடை உள்ளிட்ட அவர் பயன்படுத்திய உடைமைகள் ஒப்படைக்கும் ஆவணத்திலும் சசிகலா கையெழுத்திட்டார். இதையடுத்து அவருக்கு சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.

சசிகலாவிடம் அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான கடிதம் ஒன்றையும் சிறை அதிகாரிகள் வழங்கினர். மேலும் இது தொடர்பாக அந்த மருத்துவமனை முதல்வரிடம் சிறை நிர்வாகம் ஒரு சார்பில் ஒரு கடிதம் வழங்கப்பட்டது.

சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், தொடர்ந்து இன்னும் 3, 4 நாட்கள் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார். அவர் சிகிச்சை பெறும் கட்டிடத்தின் முன் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் தமிழகத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அபராதத்தொகையை செலுத்தாததால் அவரது விடுதலை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை இன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், சிகலாவுக்கு, தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com