லஞ்சம் வாங்குபவருக்கு மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவருக்கும் இனிமேல் தண்டனை உண்டு

லஞ்சம் வாங்குபவருக்கு மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பவருக்கும் முதல் முறையாக தண்டனை வழங்கப்பட உள்ளது. இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
லஞ்சம் வாங்குபவருக்கு மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவருக்கும் இனிமேல் தண்டனை உண்டு
Published on

புதுடெல்லி,

லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் இனிமேல் தண்டனை அளிப்பதற்காக, ஊழல் தடுப்பு சட்டம்1988ல் திருத்தம் செய்யும் மசோதா, கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அந்த மசோதாவை மக்களவையில் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். அதன் மீது நடைபெற்ற விவாதத்துக்கு அவர் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாகும். லஞ்சம் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுவது, இதுவே முதல்முறை ஆகும். அதற்காக இந்த திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், அரசின் பொறுப்புடைமையை அதிகரிக்கவும், சட்டத்தின் ஷரத்துகளை கடுமை ஆக்கவும் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இது, ஊழலை சகித்துக்கொள்ளாத மோடி அரசின் நிலையை காட்டுகிறது.

மசோதாவின்படி, லஞ்சம் வாங்குபவர்களுக்கான குறைந்தபட்ச சிறை தண்டனை 3 ஆண்டாக உயர்த்தப்படுகிறது. 7 ஆண்டுகள் வரை அது நீட்டிக்கப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

முன்பு, இணை செயலாளர் அந்தஸ்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க மட்டுமே முன்அனுமதி பெற வேண்டி இருந்தது. இப்போது, அனைத்து வகையான அதிகாரிகளின் மீதான புகாருக்கும் முன்அனுமதி பெற வேண்டும். அதுபோல், அனைத்து வகையான அதிகாரிகளுக்கும் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஊழல் வழக்குகளை விரைந்து விசாரிக்க இந்த மசோதா வகை செய்கிறது. இந்த வழக்குகளை 2 ஆண்டுகளில் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்.

அதே சமயத்தில், நேர்மையான அதிகாரிகள் துன்புறுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு கூட பொய் புகாரில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

பின்னர், இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com