நாட்டில் முதல்முறையாக, கேரளாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு மந்திரி நியமனம்

பி.கே.குஞ்ஞாலிகுட்டியை மந்திரியாக நியமித்து கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன் அறிவித்துள்ளார்.
நாட்டில் முதல்முறையாக, கேரளாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு மந்திரி நியமனம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்று, கடந்த பத்தாண்டுகால இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களைக் கைப்பற்றிய ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே தனியாக 63 இடங்களை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளாவின் 24-வது முதல்-மந்திரியாக வி.டி. சதீசன் கடந்த 18-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் தனது 20 பேர் கொண்ட அமைச்சரவையுடன் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சரவை ஒதுக்கீட்டில், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) துறைக்கென தனி அமைச்சகம் இந்த அமைச்சரவையில் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'செயற்கை நுண்ணறிவு', தகவல் தொழில்நுட்பம் (IT), தொழில் மற்றும் வர்த்தகம் மற்றும் ஸ்டார்ட்-அப் ஆகிய முக்கியத் துறைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரான 74 வயது பி.கே. குஞ்ஞாலிக்குட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கேரளாவை தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறை வளர்ச்சியை நோக்கியும், ஏஐ-ஆல் இயங்கும் ஆளுகையை நோக்கியும் கொண்டு செல்லும் முக்கியப் பொறுப்பு பி.கே. குஞ்ஞாலிக்குட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய முதல்-மந்திரி வி.டி. சதீசன் நிதித்துறையை தன்வசம் வைத்துள்ளார். மேலும், முக்கியத் துறைகளான உள்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், சிறைச்சாலைகள் ஆகியவை ரமேஷ் சென்னிதலாவிடமும், மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் சன்னி ஜோசப்பிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com