உலகில் முதன்முறையாக... தடுப்பூசிகளுக்காக சர்வதேச டெண்டர் விடுத்த மும்பை மாநகராட்சி; கடும் நிபந்தனைகளும் விதிப்பு

கொரோனா தடுப்பூசிகளுக்காக மும்பை மாநகராட்சியானது உலகில் முதன்முறையாக சர்வதேச அளவில் டெண்டர் விடுத்து கடும் நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
உலகில் முதன்முறையாக... தடுப்பூசிகளுக்காக சர்வதேச டெண்டர் விடுத்த மும்பை மாநகராட்சி; கடும் நிபந்தனைகளும் விதிப்பு
Published on

மும்பை,

இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்திற்கு கூடுதலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் சூழலில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், மராட்டியம் தொடர்ந்து அதிகளவிலான பாதிப்புகளை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 46,781 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. எனினும், 58,805 பேர் குணமடைந்தது ஆறுதல் ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் 816 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்து 26 ஆயிரத்து 710 ஆகவும், மொத்த உயிரிழப்பு 78,007 ஆகவும் உள்ளது. மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டன.

இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா உயர்வால் கடந்த 1ந்தேதி முதல் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு வெளியிட்டார். இந்த ஊரடங்கு உத்தரவு வருகிற ஜூன் 1ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்காக உலகில் முதன்முறையாக சர்வதேச அளவிலான டெண்டர் விடுத்துள்ள மாநகராட்சியாக நாங்கள் இருக்கிறோம் என மும்பை மேயர் கிஷோரி பட்னாகர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்பொழுது, டெண்டர் எடுப்பதற்கான கடைசி தேதி மே 18 ஆகும். கொரோனா தடுப்பூசி ஆர்டர் எடுத்ததற்கான பணிகள் நிறைவடைந்ததும், 3 வாரங்களுக்குள் தடுப்பூசிகளை அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மற்றும் இந்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ.) ஆகியவற்றின் வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

எங்களுடைய டெண்டருக்கான நிபந்தனைகளில், தடுப்பூசிகளின் திறன் 60%க்கு கீழ் இருக்க கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்பணம் எதுவும் நாங்கள் கொடுக்கமாட்டோம். சரியான நேரத்தில் தடுப்பூசிகளை வழங்கவில்லை எனில் அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் அவசரகதியாக தடுப்பூசிகள் தேவைப்படும் பட்சத்தில், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இதுபோன்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டிய சூழல் மும்பை மாநகராட்சிக்கு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com