இந்தியாவில் தொடர்ந்து 9-வது நாளாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழே நீடிப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 9-வது நாளாக 2 லட்சத்துக்கு குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 9-வது நாளாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழே நீடிப்பு
Published on

சாதக அம்சங்கள்

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் உலக அளவில் சிறந்ததாக உள்ளது. தீவிர தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், வலிமையான மருத்துவ கட்டமைப்புகள் போன்ற காரணிகளால் இந்தியாவில் கொரோனாவின் கோரம் படிப்படியாக மறைந்து வருகிறது.

பல வல்லரசு நாடுகள் கூட இன்னும் கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் நிலையில், இந்தியா வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நாட்டில் புதிதாக நிகழும் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதில் இருந்தே இந்த சாதக அம்சங்களை உணர முடிகிறது.

11,666 பேர் பாதிப்பு

அந்தவகையில் ஒருநாளில் ஏற்பட்டிருக்கும் புதிய பாதிப்புகள் 12 ஆயிரத்தை விட குறைந்திருக்கிறது. அதாவது நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வெறும் 11 ஆயிரத்து 666 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் 97 ஆயிரம் வரை சென்ற ஒருநாள் பாதிப்பு தற்போது 12 ஆயிரத்துக்கு கீழே சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய பாதிப்புகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து ஆயிரத்து 193 ஆகியிருக்கிறது.

ஒற்றை இலக்க பலி எண்ணிக்கை

இதைப்போல நாடு முழுவதும் மேற்படி 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 123 ஆக குறைந்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 847 ஆக உயர்ந்திருக்கிறது.

மேற்படி 24 மணி நேரத்தில் நிகழ்ந்த இறப்புகளில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 32 பேர், கேரளாவில் 20 பேர், பஞ்சாப்பில் 10 பேர் மற்றும் டெல்லியில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். பல மாநிலங்களில் ஒற்றை இலக்கத்திலேயே மரண எண்ணிக்கை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

96.94 சதவீதம் மீண்டனர்

கொரோனா நோயாளிகளுக்கு நாடு முழுவதும் சிறந்த சிகிச்சை உறுதி செய்யப்படுவதன் மூலம் மரண விகிதம் தொடர்ந்து 1.44 ஆகவே நீடித்து வருகிறது. அதேநேரம் குணமடைவோர் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் மொத்த பாதிப்பில் 96.94 சதவீதத்தினர் மீண்டு உள்ளனர்.

அந்தவகையில் மொத்தம் 1 கோடியே 3 லட்சத்து 73 ஆயிரத்து 606 பேர் இதுவரை தொற்றை வென்று வீடு திரும்பியிருக்கின்றனர். இதன் மூலம் அதிக குணமடைதல் விகிதத்தை பெற்றுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இணைந்திருக்கிறது.

1.73 லட்சம் பேருக்கு சிகிச்சை

இவ்வாறு அதிகமானோர் குணமடைந்திருப்பதால் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை கடந்த 9 நாட்களாக 2 லட்சத்துக்கும் குறைவாகவே நீடிக்கிறது.

நேற்று காலை நிலவரப்படி வெறும் 1 லட்சத்து 73 ஆயிரத்து 740 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இது மொத்த பாதிப்பில் வெறும் 1.62 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் நேற்று முன்தினம் மட்டும் 7 லட்சத்து 25 ஆயிரத்து 653 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் இதுவரை நடந்துள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியே 43 லட்சத்து 38 ஆயிரத்து 773 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com