

பெங்களூரு,
பெங்களூரு மல்லேசுவரத்தில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஒவ்வொரு துறையிலும் ஊழல் மட்டுமே நடக்கிறது. ஆனால் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதாக கூறி மக்களை, முதல்-மந்திரி குமாரசாமி ஏமாற்றுகிறார்.
முதல்-மந்திரி பதவியின் மீது நான் ஆசைப்படுவதாகவும், கனவு காண்பதாகவும் சித்தராமையா கூறி இருக்கிறார். நான் முதல்-மந்திரி பதவிக்கு ஆசைப்படவில்லை. சித்தராமையா தான் மீண்டும் முதல்-மந்திரி ஆக நினைக்கிறார். அந்த பதவிக்காக கூட்டணி அரசை கவிழ்க்க அவர் முயற்சி செய்கிறார்.
ஆனால் அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்வதாக மக்களிடையே தவறான தகவல்களை கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் படுதோல்வி அடைந்ததால், கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு தொடர்வதை கூட்டணி தலைவர்களே விரும்பவில்லை. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.