நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, வருகிற கல்வி ஆண்டில் அமல்: பிரதமர் மோடி தகவல்

நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, வருகிற கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி கூறினார்.
நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, வருகிற கல்வி ஆண்டில் அமல்: பிரதமர் மோடி தகவல்
Published on

ஆமதாபாத்,

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, கடந்த 14ந் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், 1,500 படுக்கைகள் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு அளிக்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. அதன்படி, நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம், எங்கள் அரசின் அரசியல் உறுதிப்பாட்டால் நிறைவேற்றப்பட்டது.

தற்போது சமூகரீதியாக வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது.

வருகிற கல்வி ஆண்டில், நாடு முழுவதும் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும். 900 பல்கலைக்கழகங்களுடன் இணைந்த 40 ஆயிரம் கல்லூரிகளில் இது நடைமுறைப்படுத்தப்படும். இடங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.

இந்த சர்தார் படேல் மருத்துவமனை, பிரதம மந்திரி தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைக்கப்படும். அதனால் ஏழைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் அமலுக்கு வந்த 100 நாட்களில் லட்சக்கணக்கானோர் பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆமதாபாத்தில், ஷாப்பிங் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எங்கள் அரசு உருவாக்கி உள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு முடிந்தவரையில் உதவி வருகிறது. ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறையை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது என்றார்.

இதற்கிடையே, மோடி மீண்டும் பிரதமர் ஆக ஆதரவு வேண்டி, பா.ஜனதா இளைஞர் பிரிவான பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா, விஜய் லக்ஷ் 2019 என்ற பிரசார யாத்திரையை தொடங்கி உள்ளது. இந்த யாத்திரைக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில், திறமையான இளைஞர்களின் கனவுகளையும், உணர்வுகளையும் நனவாக்க பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com