

புதுடெல்லி,
டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மீதான புகார்களை பயனர்கள் தெரிவிக்க வசதியாக மத்திய அரசு புதிய குழு ஒன்றை விரைவில் அமைக்கவிருக்கிறது.
கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை நிறைவேற்றாததால், அமெரிக்காவை சேர்ந்த, 'டுவிட்டர் சமூக வலைதளைத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சட்ட பாதுகாப்பை நீக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதன் எதிரொலியாக மட்டுமின்றி இந்தியாவில் சமூக ஊடகங்கள் மீது அதிகரித்து வரும் பயனர்களின் புகாரை ஆய்வுக்கு உட்படுத்தி, தீர்வு காண்பதற்காகவும் மத்திய அரசு "குறைகள் மேல்முறையீட்டுக் குழு-வை" அமைக்கவிருக்கிறது.
ஒவ்வொரு குறைகேட்பு மேல்முறையீட்டுக் குழுவிலும் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஒரு தலைவர் மற்றும் இரண்டு முழுநேர உறுப்பினர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தகவல் தொழில்நுட்பம் திருத்த விதிகள், 2022 அறிமுகப்படுத்தப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 'குறைகள் மேல்முறையீட்டுக் குழுக்களை' அமைக்கும் " என்று கூறப்பட்டுள்ளது.