வெனிசுலா ஜனாதிபதியுடன் வெளியுறவுத்துறை மந்திரி, செயலாளர் சந்திப்பு

மும்பையில், இந்திய எரிசக்தி தொழில் துறை தலைவர்களையும், செயலதிகாரிகளையும் டெல்சி சந்தித்து பேசுவார் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலா ஜனாதிபதியுடன் வெளியுறவுத்துறை மந்திரி, செயலாளர் சந்திப்பு
Published on

புதுடெல்லி

வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தியாவுக்கு நேற்று வருகை தந்துள்ளார். 7-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் இரு நாடுகளுக்கு இடையேயான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறை சார்ந்த விசயங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்கிறார்.

அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இதனையடுத்து, நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதற்கு ரஷியா, ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியானார். அவர் அமெரிக்காவுடன் சுமுக அணுகுமுறையை கையாண்டு வருகிறார்.

கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சில தளர்வுகளை ஏற்படுத்தியது. இதன்பின்னர், அந்நாட்டிடம் இருந்தும் இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த மே மாதத்தில் வெனிசுலாவிடம் இருந்து அதிகம் எண்ணெய் இறக்குமதி செய்த 2-வது நாடாக இந்தியா உள்ளது.

இந்த சூழலில், டெல்சியின் பயணம் அமைந்துள்ளது. இந்த பயணத்தில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேசினார். அப்போது, வெனிசுலாவுடனான உறவை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டை மந்திரி ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த சந்திப்பில் எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து பொருட்கள், சுகாதார நலன், போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த விசயங்களை பற்றியும் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியையும் சந்தித்து பேசினார். டெல்சியின் இந்த பயணத்தில், பிரதமர் மோடியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதேபோன்று மும்பையில், இந்திய எரிசக்தி தொழில் துறை தலைவர்களையும், செயலதிகாரிகளையும் டெல்சி சந்தித்து பேசுவார் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் எண்ணெய் துறை மந்திரியாக டெல்சி ரோட்ரிக்ஸ் இருந்தபோது, அவருடைய தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு வருகை தந்தனர். அப்போது, இந்திய எரிசக்தி வார மாநாட்டில் அவர்கள் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com