

புதுடெல்லி,
நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நிபந்தனைகளுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் கட்டிட பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், அவர்கள் தங்கி வேலை செய்த மாநிலங்களில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை (ஹாட்ஸ்பாட்) தவிர்த்து, குறைவான பாதிப்பு உள்ள மற்ற பகுதிகளில் ஏற்கனவே சில செயல்பாடுகளுக்கு விலக்கு அளித்து நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து இந்த தொழிலாளர்கள் தொழிற்சாலைகள், கட்டிடப்பணி மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று வேலை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த தொழிலாளர்கள் அந்த இடங்களுக்கு செல்வதற்கு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தேவையான வசதிகளை செய்து தரவேண்டும்.
சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் பெயர்களை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பதிவு செய்து, அந்த தொழிலாளர்கள் எந்தெந்த பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்.
இந்த தொழிலாளர்களில் யாரேனும் ஏற்கனவே அவர் கள் வேலை செய்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய பரிசோதனை நடத்தி நோய்த் தொற்று இல்லாதவர்கள் உரிய இடங்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து தரவேண்டும்.
இந்த நடவடிக்கைகள் மாநிலத்துக்கு வெளியே அனுமதிக்கப்பட மாட்டாது. அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கு உள்ளேயே அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
தொழிலாளர்களை பேருந்துகளில் அழைத்துச் செல்லும்போது தேவையான சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். அந்த பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அழைத்துச் செல்லும் போது தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, சுத்தமான குடிநீர் ஆகியவற்றை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.