கர்நாடக கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 14 பேர் உயிரிழப்பு; வீரியமிக்க பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டது தெரியவந்தது

கர்நாடக கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 14 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.
கர்நாடக கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 14 பேர் உயிரிழப்பு; வீரியமிக்க பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டது தெரியவந்தது
Published on

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபுரத்தின் மீது கலசம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 14 பேர் பலியானார்கள். மேலும் 90-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாரம்மா அம்மன் கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவருடைய மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரசாதத்தில் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டது என்பது உணவுப்பொருட்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டுள்ளது. வீரியமிக்க பூச்சிக்கொல்லியால் உடலின் நரம்பு மண்டலத்தை செயல் இழக்கச் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தில் (சிஎப்டிஆர்ஐ) ஆய்வுக்காக வழங்கப்பட்ட பிரசாத உணவுப்பொருட்களில் பூச்சிக்கொல்லி துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த விசாரணையின் போது சின்னப்பியின் மகன் லோகேஷ் கூறும்போது, எனது தந்தை சின்னப்பிக்கும், மாதேசுக்கும் இடையே கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்தது. இதனால் எனது தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரி ஒருவரின் ஆலோசனைப்படி பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டு இருக்கிறது. எனவே இதுதொடர்பாக தமிழ்நாடு பூசாரியை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என்று கூறினார். இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரியை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com