

மலப்புரம்,
இரை தேடி தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் போராடி மீட்டனர்.
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த கருளாயி அருகே பாலாங்கரா பகுதியில் விவசாயி அப்துல் என்பவரது தோட்டம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று இரை தேடி தோட்டத்துக்குள் புகுந்தது. அங்குள்ள கிணற்றில் தவறி காட்டு யானை விழுந்தது. இதனால் யானை வெளியே வர முடியாமல் தவித்தது.
அதோடு கிணற்றுக்குள் சுற்றி சுற்றி வந்தது. காட்டு யானையின் பிளிறல் சத்தம் கேட்டு ஊர் மக்கள் அங்கு வந்து பார்த்தனர். இதுபற்றி மலப்புரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது 5 வயது காட்டு யானை கிணற்றில் தவறி விழுந்து தவிப்பது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. இதன் மூலம் காட்டு யானை வெளியே வர வழி ஏற்படுத்தப்பட்டது. அந்த வழியாக காட்டு யானை கிணற்றில் இருந்து வெளியே வந்தது.