ஏலச்சீட்டு நடத்தி ரூ.3¼ கோடி மோசடி

சிந்தாமணியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3¼ கோடியை மோசடி செய்துவிட்டு தலைமறைவான அசாம் வியாபாரிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஏலச்சீட்டு நடத்தி ரூ.3¼ கோடி மோசடி
Published on

சிந்தாமணி:

சிந்தாமணியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடியை மோசடி செய்துவிட்டு தலைமறைவான அசாம் வியாபாரிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

அசாம் வியாபாரிகள்

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பப்புசிங் மற்றும் போப்பி சிங். இவர்கள் இருவரும் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுன் பகுதியில் கடந்த 4 வருடங்களாக வசித்து வந்தனர். வியாபாரம் செய்து வந்த இவர்கள் ஏலச்சீட்டும் நடத்தி வந்தனர். மேலும் நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தனர். அதில் ரூ.12 ஆயிரம் முதலீடாக செலுத்தினால் ஒரே மாதத்தில் ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தனர்.

அதன்பேரில் அவர்களது நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். மேலும் ஏலச்சீட்டிலும் ஏராளமானோர் உறுப்பினர்களாக இணைந்தனர். பின்னர் சில வாடிக்கையாளர்களுக்கு பப்புசிங்கும், போப்பிசிங்கும் அறிவித்தபடி பணத்தையும் வழங்கினர்.

மாயம்

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி முதல் அவர்கள் மாயமாகினர். அவர்களது நிதி நிறுவனம் மற்றும் பிற கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இதுபற்றி சிந்தாமணி புறநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பப்புசிங் மற்றும் போப்பிசிங் ஆகியோர் தங்களது வீடு, நிதி நிறுவனம் மற்றும் கடமாச்சனஹள்ளி கேட் பகுதியில் செயல்பட்டு வரும் சிறிய தொழிற்சாலை ஆகியவற்றை பூட்டிவிட்டு மாயமாகிவிட்டது தெரியவந்தது.

ரூ.3.27 கோடி

அவர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.3.27 கோடியை வசூலித்து மேசடி செய்து தலைமறைவாகி விட்டதும் தெரியவந்தது. இதைக்கேட்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் கதறி அழுதனர். பின்னர் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள பப்புசிங், போப்பிசிங் ஆகியோரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com