

புதுடெல்லி
ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான தீபக் சிங்லாவுக்கு எதிராக ஹவாலா மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. அவர் டெல்லி மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி வளர்ச்சிக்காக நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கு அவருடைய உறவினரான மாமா அசோக் குமார் மிட்டல் மற்றும் சகோதரர் ரமன் சிங்லா மற்றும் ஹரீஷ் சிங்லா ஆகியோரும் உதவியாக இருந்துள்ளனர். இதன்படி, ரூ.150 கோடிக்கும் கூடுதலாக பணமோசடி நடந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையொட்டி, டெல்லி மற்றும் கோவாவில் உள்ள சிங்லாவின் வீடுகளில் அமலாக்க அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, அவரை இன்று கைது செய்தனர்.
எனினும், கட்சியின் அமைப்பு சார்ந்த தகவல்களை சேகரிக்கும் முயற்சியாக பா.ஜ.க. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது என ஆம் ஆத்மி குற்றச்சாட்டாக கூறியுள்ளது. கோவாவில் கட்சிக்கு கிடைத்து வரும் ஆதரவை பொறுக்க முடியாமல், எங்களை மிரட்டுவதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது.
அதற்காக அமலாக்க அதிகாரிகளை கொண்டு கட்சி தொண்டர்களை அச்சுறுத்தி வருகிறது என்று ஆம் ஆத்மியின் டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான அதிஷி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.