சத்தீஷ்கார் மாநில முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் பழங்குடியின சாதி சான்றிதழ் ரத்து

சத்தீஷ்கார் மாநில முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் பழங்குடியின சாதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.
சத்தீஷ்கார் மாநில முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் பழங்குடியின சாதி சான்றிதழ் ரத்து
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநில முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் பழங்குடியின சாதி சான்றிதழை உயர்மட்ட ஆய்வுக்குழு ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகி. இவர் சத்தீஷ்கார் புதிதாக உருவாக்கப்பட்டவுடன், முதலாவது முதல்-மந்திரியாக இருந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்த கட்சியில் இருந்து விலகி, ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கார் என்ற தனிக்கட்சி தொடங்கினார். அதன் சார்பில், மர்வாகி என்ற பழங்குடியினருக்கான தனித்தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

ஆனால், அஜித் ஜோகி பழங்குடியினத்தை சேர்ந்தவர் அல்ல என்ற சர்ச்சை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு, அஜித் ஜோகியின் சாதி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஒரு உயர்மட்ட ஆய்வுக்குழுவை அமைக்குமாறு அப்போதைய மாநில பா.ஜனதா அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அமைக்கப்பட்ட குழு, அஜித் ஜோகியின் சாதி சான்றிதழ் செல்லாது என்று அறிவித்தது.

அதை எதிர்த்து சத்தீஷ்கார் ஐகோர்ட்டில் அஜித் ஜோகி வழக்கு தொடர்ந்தார். அதில், புதிதாக ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, பழங்குடியினம், பட்டியல் இன மேம்பாட்டு துறை செயலாளர் டி.டி.சிங் தலைமையில் உயர்மட்ட சாதி ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, விசாரணைக்கு பிறகு, கடந்த 23-ந் தேதி தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது.

அதில், அஜித் ஜோகி, தான் பழங்குடி இனத்தில் கன்வர் என்ற சாதியை சேர்ந்தவன் என்பதை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. எனவே, அஜித் ஜோகியின் சாதி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது.

மேலும், ஜோகி மீது நடவடிக்கை எடுக்க பிலாஸ்பூர் மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் அளித்தது.

அதையடுத்து, அஜித் ஜோகி மீது போலீசில் புகார் கொடுக்குமாறு பிலாஸ்பூர் தாசில்தார் பரத்வாஜை, மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதன்படி, சிவில் லைன் போலீஸ் நிலையத்தில் தாசில்தார் பரத்வாஜ் புகார் கொடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்டு, முறைகேடாக சாதி சான்றிதழ் பெற்றதாக, சத்தீஷ்கார் எஸ்.சி., எஸ்.டி. இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் ஒழுங்குமுறை விதிகளின் 10-வது பிரிவின் கீழ் அஜித் ஜோகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு ஆகும்.

73 வயதான அஜித் ஜோகி, பழங்குடியினருக்கான தனித்தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர். அவர் பழங்குடியினர் அல்ல என்று உத்தரவாகி இருப்பதால், அவர் எம்.எல்.ஏ. பதவியை பறிகொடுக்கும் நிலையும் உருவாகி உள்ளது.

இந்த உத்தரவு, காங்கிரஸ் அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி கருத்து தெரிவித்துள்ளார். ஆய்வுக்குழு உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com