கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி காலமானார்

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி காலமானார்
Published on

பெங்களூரு,

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏவாக இருந்தார்.

சமீபத்தில் உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர்

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உம்மன் சாண்டியின் (73) உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் உறுதி செய்யப்பட்டது. மரணம் குறித்து அவரது மகன் சாண்டி உம்மன் தகவல் தெரிவித்தார்.

முன்னதாக 2004-06 மற்றும் 2011-16 ஆண்டுகளில் கேரள முதல்-மந்திரியாக உம்மன்சாண்டி பதவி வகித்தார். 2004-2006-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியடைந்த ஏ.கே.ஆண்டனி பதவி விலகியதை அடுத்து, உம்மன்சாண்டி முதல்-மந்திரியாக பதவியேற்றார். அதன்பின் ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.

பின்னர் 2011ல் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இரண்டு இடங்களில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்ய உம்மன் சாண்டியின் ராஜதந்திரத் திறமை உதவியது. ஆட்சியின் கடைசி நாட்களில் சோலார் சர்ச்சை அரசை வாட்டி வதைத்தது.

எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாட்டின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் உள்ளனர். இதனால் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com