

மும்பை,
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக பிரபல தாதா சோராபுதீன் ஷேக் கடந்த 2005ம் ஆண்டு நவம்பரில் குஜராத் மாநிலம் காந்திநகரில் வைத்து போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு படையினரால், போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரே மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, வன்சாரே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதி சுனில்குமார் ஜே.சர்மா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரே, தினேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகாததால், அவர்கலை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.