இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு இருநாடுகளிலும் கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பிற்காக மன்மோகன் சிங்குக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட இந்த விருது, தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் விரைவில் டெல்லியில் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், "நமது நாட்டின் எதிர்காலம் மற்றும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் கீழ் இளைஞர்களிடம் இருந்து வரும் அர்த்தமுள்ள இந்த விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-இங்கிலாந்து உறவு உண்மையில் நமது கல்விக் கூட்டாண்மை மூலம் வரையறுக்கப்படுகிறது. நமது தேசத்தை நிறுவிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் படேல் மற்றும் பலர் இங்கிலாந்தில் படித்து, சிறந்த தலைவர்களாக மாறினர். பல ஆண்டுகளாக எண்ணற்ற இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com