மத்திய அரசின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பாராட்டு

மத்திய அரசின் முயற்சிக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பாராட்டு
Published on

புதுடெல்லி,

சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2029 பொதுத்தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டம் அமலுக்கு வருவதை உறுதிசெய்ய முடியும்.

இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல், இந்தியாவின் 12-வது ஜனாதிபதியாக கடந்த 2007-ம் ஆண்டு பதவியேற்றார். மேலும், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட திருத்தம், சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் பங்களிப்பையும் அதிகரிப்பதை உறுதி செய்வதன் மூலம், இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த மசோதா சட்ட ரீதியான சலுகையை விட மேலானது. இது பாலின சமத்துவத்தை முன்னெடுத்துச் செல்லவும், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை வளர்க்கவும், வலிமையான, முற்போக்கான இந்தியாவைக் கட்டியெழுப்பவும் நாம் அனைவரும் கொண்டுள்ள கூட்டு உறுதிப்பாட்டிற்கான சான்றாகும்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் உயர்மட்ட சட்டமன்ற அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்வதோடு, சமச்சீரான கொள்கை உருவாக்கத்திற்கும் வழிவகுக்கும். இந்த முன்னெடுப்பு, கிராமப்புற மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைப் பொறுப்புகளை ஏற்கவும், தேசத்தின் வளர்ச்சிப் பணியில் தீவிரமாக பங்கேற்கவும் ஊக்குவிக்கும்.

நீண்ட காலமாக முன்மொழியப்பட்டு வந்த இந்த கனவை நனவாக்குவதற்காக, பல ஆண்டுகளாக அயராது உழைத்த தலைவர்களையும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் நான் பாராட்டுகிறேன். மேலும் சமத்துவமான, வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் சந்தேகமின்றி ஒரு முக்கியப் பங்காற்றும். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்தை நோக்கிய தொடர் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com