

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27-வது ஆண்டு விழா மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சியின் தலைவர் சரத் பவார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்திருப்பது குறித்து சரத் பவார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி மிக நீண்ட காலம் பிரதமராக பதவிவகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரைப் போன்ற ஒரு தலைவர் இல்லை என்ற சித்தரிப்பு உருவாக்கப்படுகிறது. ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தில், பிரதமர் என்பது ஒரு அரசியலமைப்பு பதவி. அந்த பதவியை நாம் மதிக்க வேண்டும். ஆனால் நேரு நேருதான், இந்தியர்கள் அவருடைய தியாகங்களை மறக்க முடியாது. தேச கட்டுமானத்திற்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும் நேரு ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது. அது மதிக்கப்பட வேண்டும். நேருவை வேறுயாருடனும் ஒப்பிட முடியாது. மகாத்மா காந்தியின் தலைமையிலான சுதந்திரப் போராட்டத்தின்போது நேரு பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.