

புதுடெல்லி,
பாரதீய ஜனதா கட்சியை முதன் முதலாக மத்தியில் ஆட்சியில் அமர்த்தியவர் என்ற பெருமை பெற்றவர் வாஜ்பாய்.
மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ள 93 வயதான வாஜ்பாய், முதுமை மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக, டெல்லி கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
வாஜ்பாயின் உடல்நிலை மோசம் அடைந்ததால், பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தார்.
தீவிர சிகிச்சை
அதன்பிறகு, வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், ஜிதேந்திர சிங், ஹர்ஷ வர்தன், அஸ்வினி குமார், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, அவரது மகள் பிரதிபா ஆகியோர் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர்.
நிகழ்ச்சிகள் ரத்து
வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதால், மத்திய அரசின் சார்பில் நடைபெறுவதாக இருந்த சில நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்படுவதாகவும், சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதாக இருந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.
வாஜ்பாயின் உடல்நிலை அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் வசிக்கும் அவரது உறவினர்கள், அங்கிருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு வந்தனர்.
வாஜ்பாய் மரணம்
இந்த நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, வாஜ்பாய் நேற்று மாலை மரணம் அடைந்தார்.
இதுபற்றி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டு உள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும், அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரது மறைவால் நாடு அடைந்துள்ள துயரத்தில் தாங்களும் பங்குகொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
வாஜ்பாயின் உடல் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் இருந்து, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரவு 9.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் அங்கு வந்து வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் முன்னாள் பிரதமர் பிரணாப் முகர்ஜி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதி ஊர்வலம்
வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பெ துமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக் கப்படுவார்கள். அதன்பிறகு உடல் அங்கிருந்து, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இன்று மாலை உடல் தகனம்
அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.
வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்- மந்திரிகள், கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவர். அவருக்கு நமீதா கவுர் பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மட்டும் உள்ளார்.