

காந்தி நகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், இரவு உணவிற்கு தான் கேட்ட காய்கறியைச் சமைக்காததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியாலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரோடா பகுதியில் உள்ள நரோடா ஸ்மார்ட் சிட்டி-2 குடியிருப்பில் வசித்து வந்தவர் திலீப் குமார் கராடி (வயது 39). முன்னாள் ராணுவ வீரரான இவர், குஜராத் கனிம வளர்ச்சி கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிர்மலா கராடி (வயது 34). இந்த தம்பதியினருக்கு இடையே ஏற்கனவே குடும்ப மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த (வியாழக்கிழமை) இரவு திலீப் குமார் பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இரவு உணவிற்காக நிர்மலா சமைத்திருந்த காய்கறி பிடிக்காததால், தான் கேட்ட பீர்க்கங்காயை ஏன் சமைக்கவில்லை எனக் கேட்டு திலீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே தொடங்கிய இந்த சிறிய வாக்குவாதம், சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி முற்றியது. இதனால் கடும் ஆத்திரமடைந்த நிர்மலா, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து திலீப் குமாரின் நெஞ்சின் இடது பகுதியில் பலமாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த திலீப் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிய நிர்மலாவை, நரோடா போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மறுநாள் (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர். இது குறித்துக் கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நிர்மலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண சமையல் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.