தேர்தலில் 'சீட்' வழங்காததால் விரக்தி: அரசியலில் இருந்து விலகினார் ஹர்ஷவர்தன்

டெல்லியில் உள்ள தனது மருத்துவமனையில் மீண்டும் டாக்டர் பணியில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிபாக்கப்படுகிறது.

இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் முதற்கட்டமாக 195 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜனதா நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

அதில் முன்னாள் மத்திய சுகாதார மந்திரியும், டெல்லி சாந்தினி சவுக் தொகுதியின் தற்போதைய எம்.பி.யுமான ஹர்ஷவர்தன் பெயர் இடம் பெறவில்லை. மாறாக சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்பவரை வேட்பாளராக பா.ஜனதா அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக ஹர்ஷவர்தன் நேற்று அறிவித்தார். டெல்லியில் உள்ள தனது மருத்துவமனையில் மீண்டும் டாக்டர் பணியில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "30 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற தேர்தல் வாழ்க்கையில் 5 சட்டமன்றத் தேர்தல்களிலும், 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முன்மாதிரியான வித்தியாசங்களுடன் போராடி வெற்றி பெற்றதோடு, கட்சி அமைப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகளில் பல மதிப்புமிக்க பதவிகளையும் வகித்தேன். தற்போது மீண்டும் என் வேர்களுக்கு திரும்ப தலைவணங்குகிறேன்.

50 ஆண்டுகளுக்கு முன்பு கான்பூரில் உள்ள ஜி.எஸ்.வி.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவபடிப்பில் சேர்ந்தபோது, ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும், மனித குலத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைமையின் வற்புறுத்தலின் பேரில்தான் நான் தேர்தல் களத்தில் குதித்தேன்.

ஏனெனில் அரசியல் என்பதை நமது 3 முக்கிய எதிரிகளான வறுமை, நோய் மற்றும் அறியாமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பாக நான் கருதினேன். டெல்லி கிருஷ்ணா நகரில் உள்ள எனது மருத்துவமனை எனது வருகைக்காக காத்திருக்கிறது. நான் அங்கு செல்கிறேன், என்னால் காத்திருக்க முடியாது" என்று ஹர்ஷவர்தன் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com