அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அறக்கட்டளைக்கு அதிகாரம்

தற்போது மத தலைவராக இருப்பவர் 14-வது தலாய்லாமா.
தர்மசாலா,
இந்தியாவின் அண்டை நாடான திபெத், 1959-ம் ஆண்டு முதல், சீனாவின் கட்டுப்பாட்டில் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, தற்போதைய தலாய் லாமா, சிறுவயதாக இருந்த போதே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார்.
அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள், இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள், திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை. தற்போது மத தலைவராக இருப்பவர் 14-வது தலாய்லாமா.
இவர் இந்த மாதம் வாரிசை அறிவிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று அவர் வாரிசை தேர்வு செய்ய மறுப்பு தெரிவித்தார். அவர் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார். இது குறித்து தலாய் லாமா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதியே புதிய தலாய் லாமாவை அங்கீகரிப்பதற்கான நடைமுறை குறித்து தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் பொறுப்பு, தலாய் லாமாவின் அலுவலகமான கடென் போட்ராங் அறக்கட்டளையின் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் திபெத்திய புத்த மரபுகளின் பல்வேறு தலைவர்களை சந்தித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தலையிட வேறு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






