டெல்லி: இன்சூரன்சை புதுப்பித்து தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி; 4 பேர் கைது

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க மோசடி வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
4 லட்சம் பணமோசடியில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

புதுடெல்லி

டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு அவரின் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகி விட்டது என்றும், அதனை புதுப்பிக்க ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ் தவணை செலுத்த வேண்டும் என்றும் தொலைபேசிக்கு போலியான அழைப்பு வந்தது. இதையடுத்து அவர்களை இன்சூரன்ஸ் அதிகாரிகள் என்று நம்பிய அவர், மோசடிக்காரர்கள் வழங்கிய வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றினார். பின்னர் அவருக்கு போலியான பாலிசி ஆவணங்கள் அனுப்பப்பட்டன.

ராவத் கைது

இந்த ஆவணத்தில் சந்தேகமடைந்த அந்த நபர் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ​​காவல் துறையினர் அந்த நபரின் கைபேசி பதிவுகள், டிஜிட்டல் தடயங்கள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பணப்பரிமாற்றங்களை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் சந்தேகப்படும்படியான நபர் சுனில் குமார் ராவத் (வயது 38) டெல்லியின் காந்தி நகர் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டார்.

3 பேர் கைது

ராவத் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராவத் கூறியதாவது:- ராகுல் (வயது 28) மற்றும் சோனு (வயது 37) ஆகிய இரண்டு இடைத்தரகர்களும் வங்கி கணக்குகளை ஏற்பாடு செய்ததாகவும், போலி காப்பீட்டு ஆவணங்களை தயாரித்ததாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ராகுல் மற்றும் சோனு ஆகியோரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளை வழங்கிய சிவம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணை

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க மோசடி வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர். போலியான சிம் கார்டுகளையும், வங்கி கணக்குகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் இன்சூரன்ஸ் அதிகாரிகள் போல் நடித்து, மக்களை, குறிப்பாக மூத்த குடிமக்களை குறிவைத்து, பாலிசியை புதுப்பிப்பதற்காக பணத்தை அனுப்பும்படி அவர்களை நம்ப வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற பல கோணத்தில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com