அரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி
Published on

சண்டிகர்,

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் புடானா கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சூளையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் அங்கு வேலை செய்து வருகின்றனர்.

செங்கல் தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூளையில் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு செங்கல் சூளையின் சுவர் அருகே குழந்தைகள் மற்றும் சில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூளையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சூரஜ் (9), நந்தினி (5), விவேக் (9) மற்றும் 3 மாதங்களே ஆன நிஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 வயது சிறுமி கவுரி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அச்சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து குழந்தைகளும் உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள பதாவ் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. மீனா தெரிவித்துள்ளார். 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com