பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது முறைகேடு: வீடியோ ஆதாரம் வெளியிட்டு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வீடியோ ஆதாரம் வெளியிட்டு குற்றம் சாட்டின.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது முறைகேடு: வீடியோ ஆதாரம் வெளியிட்டு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அதிரடியாக பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தார்.

இதன் காரணமாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள், அதே ஆண்டின் டிசம்பர் 31-ந்தேதி வரை வங்கிகளில் செலுத்தி அவற்றை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த காலகட்டம் கடந்த பின்னர் பாரதீய ஜனதா மேலிட தலைவர்களுக்கு நெருக்கமான குஜராத் கட்சித்தலைவர் ஒருவர் ரூ.5 கோடியை 40 சதவீத கமிஷன் அடிப்படையில் மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்படி அவர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதை ஆமதாபாத் பத்திரிகையாளர்கள் ரகசியமாக படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ 30 நிமிடம் ஓடத்தக்கது ஆகும்.

இந்த தகவல்களை வீடியோ ஆதாரத்துடன் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் வெளியிட்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதாதளம், லோக்தந்திரிக் ஜனதாதளம், தேசிய மாநாடு, தெலுங்குதேசம் ஆகியவற்றின் தலைவர்கள் உடன் இருந்தனர்.

ஆனால் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றிய தகவல்களை வெளியிட கபில் சிபல் மறுத்து விட்டார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மட்டுமே இதுபற்றிய விசாரணை சாத்தியப்படும் என்று கூறினார்.

பேட்டியின்போது கபில் சிபல், அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் மற்றும் வங்கிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளன. பிரதமர் மோடியும் இதில் குற்றவாளி. அவர் எப்படி காவலாளியாக இருக்க முடியும்? என்று, கேள்வி எழுப்பினார்.

ஆனால் கபில் சிபலும், எதிர்க்கட்சி தலைவர்களும் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட தகவல்களை பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய நிதி மந்திரியுமான அருண்ஜெட்லி நிராகரித்தார்.

வீடியோவின் ரகசிய படப்பிடிப்பு நடவடிக்கை (ஸ்டிங் ஆபரேஷன்) போலியானது என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com