பெண்களுக்கு இலவச பஸ் பயணம்... பதவியேற்றதும் முதல் உத்தரவிட்ட கேரள முதல்-மந்திரி சதீசன்

ஆஷா பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தில் மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்குவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்களுக்கு இலவச பஸ் பயணம்... பதவியேற்றதும் முதல் உத்தரவிட்ட கேரள முதல்-மந்திரி சதீசன்
Published on

திருவனந்தபுரம்

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களை கைப்பற்றியது. இதில் 63 இடங்களில் வென்ற காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும் வென்றது. காங்கிரசின் இந்த வெற்றி மூலம் 10 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

எனினும், காங்கிரசில் முதல்-மந்திரியாக யார் பதவி வகிப்பது என்பதில் இழுபறி நீடித்தது. அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி.யான கே.சி.வேணுகோபால், கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி. சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதனையடுத்து அவர், கவர்னர் ஆர்.வி. அர்லேக்கரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க அழைக்கும்படி கேட்டு கொண்டார். அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கேரள முதல்-மந்திரியாக வி.டி. சதீசன் பதவி ஏற்றார். அவருக்கு ரகசிய காப்பு பிரமாணமும், பதவிப்பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

அவர் பதவியேற்றதும், முதல்முறையாக கூடிய மந்திரிசபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பஸ் பயணம், முதியோர் நலனிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு துறை, ஆஷா பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தில் மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் உயர்வு ஆகியவை இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன.

2023-ம் ஆண்டில் நவ கேரள யாத்திரையின்போது, இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்கவும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆஷா பணியாளர்கள் சம்பளம் உயர்த்தி வழங்க கோரி, கேரள தலைமை செயலகத்திற்கு முன்பு நீண்டகாலத்திற்கு போராடி வந்தனர். அவர்களுக்கு, மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என முன்பே வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி ஆஷா பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தில் மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்குவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோன்று அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், பள்ளி சமையல் பணியாளர்கள், ஆயாக்கள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.1,000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com