இனி வாழ்நாள் முழுவதும் இலவச மின்சாரம்; இந்தியாவின் முதல் முழுமையான சோலார் கிராமம்

இந்தியாவின் முதல் முழுமையான சூரிய ஒளி மின்சார கிராமமாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளது.
இனி வாழ்நாள் முழுவதும் இலவச மின்சாரம்; இந்தியாவின் முதல் முழுமையான சோலார் கிராமம்
சோலார் கிராமம்
Published on: 

ராய்பூர்,

இந்தியாவிலேயே முதல் முறையாக, 24 மணி நேரமும் தடையில்லா சூரிய ஒளி மின்சாரம் பெறும் முழுமையான சோலார் கிராமமாக சத்தீஸ்கர் மாநிலத்தின் 'கைரா' கிராமம் உருவெடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அங்குள்ள வீடுகளுக்கு மின்கட்டணம் 'பூஜ்ஜியம்' ஆகியுள்ளது.

சூரிய ஒளி மின்சார கிராமம்

சத்தீஸ்கர் மாநிலம், ராஜ் நந்த்காவ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கைரா. சுமார் 889 மக்கள் தொகையைக் கொண்ட இந்த கிராமம், தற்போது இந்தியாவின் முதல் முழுமையான சூரிய ஒளி மின்சாரக் கிராமமாக மாறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

282 கிலோ வாட் மின் உற்பத்தி

இந்த கிராமத்தில் மொத்தம் 141 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்தின் கூரைகளிலும் தலா 2 கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த கிராமத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 282 கிலோ வாட்டாக உயர்ந்துள்ளது.

மக்களுக்கு ரூ.1 கூட செலவில்லை

மிக முக்கியமாக, இந்த திட்டத்திற்காக கிராம மக்கள் தங்கள் கைப்பட ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை என்பது தான் இதன் சிறப்பம்சம். மத்திய - மாநில அரசுகளின் கூட்டு உதவி மற்றும் 'பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டத்தின்' கீழ் வழங்கப்பட்ட மானியத் தொகை போக, மீதமுள்ள எஞ்சிய பெருந்தொகையை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் மாவட்ட நிர்வாகமே முழுமையாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

மாநில மின் கட்டமைப்புடன் இணைப்பு

வீடுகளின் அன்றாட தேவைக்கு போக எஞ்சியிருக்கும் கூடுதல் மின்சாரம், 'நெட் மீட்டரிங்' தொழில்நுட்பம் மூலம் நேரடியாக மாநில மின் கட்டமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இத்தனை காலம் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் செலவோடு போட்டி போட்டு கொண்டு, கிராம மக்களின் மாதாந்திர செலவில் மின்கட்டணச்சுமை, இனி 'பூஜ்ஜியமாக' மாறியுள்ளது.

X