தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் பொற்காலத்தை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மோடி

ஸ்பெயின் அதிபர் மற்றும் பின்லாந்து பிரதமர் ஆகியோரை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் பொற்காலத்தை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

குடியரசு தினத்தையொட்டி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவரும் கடந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 27-ந்தேதி இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என பெயரிடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் 140 கோடி இந்தியர்களுக்கும், மற்றும் கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்களுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை டெல்லியில் செயற்கை நுண்ணறிவு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட உயர் திறன் கொண்ட தொடக்க நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு துறையில் சர்வதேச ஒத்துழைப்பை காட்சிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பின்லாந்து பிரதமர் பெட்டெரி ஆர்போ ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இருவரையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. பாதுகாப்பு, ராணுவம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட இந்தியா-ஸ்பெயின் இடையிலான நட்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இந்தியாவும், ஸ்பெயினும் 2026-ம் ஆண்டை கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ஆண்டாக கொண்டாடுகின்றன. இது மக்களிடையிலான தொடர்பை ஆழப்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஸ்பெயினுடனான பொருளாதார கூட்டாண்மையில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், நமது நாட்டு மக்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் பின்லாந்து பிரதமரை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் பொற்காலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்ததற்காக பின்லாந்து பிரதமர் பெட்டெரி ஆர்போவுக்கு நன்றி தெரிவித்தேன்.

இந்தியாவும், பின்லாந்தும் வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. இதனால் இருநாடுகள் இடையிலான பொருளாதார இணைப்புகள் வலுவடையும். 6G, மாசில்லாத எரிசக்தி, உயிரி எரிபொருட்கள், வட்டப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு எதிர்கால தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நாங்கள் பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com