பெண்களுக்கு இலவச பயணம்; கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்

கேரளாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு இலவச பயணம்; கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான(KSRTC) பேருந்துகளில், பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் உறுதியளித்தது. இது 'இந்திரா உத்தரவாதம்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து கேரளாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய அரசுக்கு தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை விடுகப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தனியார் போக்குவரத்து நிறுவனங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், இது மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கேரள மாநில தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சூரில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கத் தலைவர் டி.கோபிநாதன், “பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதனால் தனியார் பேருந்துகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய அரசு ஒரு சிறப்பு தொகுப்பை அறிவிக்க வேண்டும்.

கேரள அரசின் மாநில பட்ஜெட்டில் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கான சிறப்பு திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றால், வரும் 19-ந்தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com