ஜார்க்கண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி: ஹேமந்த் சோரன் அறிவிப்பு

ஜார்க்கண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
ஜார்க்கண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி: ஹேமந்த் சோரன் அறிவிப்பு
Published on

ராஞ்சி,

நாட்டில் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கு கூடுதலான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டத்தில் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதன்பின்னர் கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில், 100 வயது கடந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் வருகிற மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.

இதன்படி தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வைத்து கொள்ளும். தனியார் தடுப்பூசி வினியோகம் செய்வோர் அதற்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகளை போட்டு கொள்ள முடியும்.

நாட்டில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அசாம், சத்தீஷ்கார் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இலவச கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்பொழுது, இந்த பேரிடர் சூழலில் இரவும் பகலும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக அரசு பணியாற்றி கொண்டிருக்கிறது. அனைவரின் ஒத்துழைப்புடன், கொரோனாவை மீண்டும் தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கொரோனா தோற்கும். ஜார்க்கண்ட் வெற்றி பெறும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com