அடிக்கடி தகராறு; கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி

மோகன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்ததாகக்கூறப்படுகிறது.
கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி
கோப்புக்காட்சி
Published on: 

ஐதராபாத்,

சந்தேகப்பட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை, தூங்கிக் கொண்டிருந்தபோது மனைவி உலக்கையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை, தூங்கிக் கொண்டிருந்த போது உலக்கையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியால் மாவட்டம் பிருந்தாவனம் காலனியைச் சேர்ந்தவர் மோகன் (32). இவர் தனது மனைவி ஜமுனா (28) மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வேறு

ஒரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்த மோகன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்ததாகக்கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜமுனா, இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு மகளுடன் தாய் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார்.

பின்னர் உறவினர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி, ஜமுனாவை மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மனைவியைப் பிரிந்திருந்த காலத்தில் மோகன் யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வந்ததுடன், உறவினர் வீட்டிலும் தங்கியிருந்தார். இதற்கிடையே சமாதானத்துக்குப் பிறகு இருவரும் சிலகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மீண்டும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மோகன், அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜமுனா, கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மோகன் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த உலக்கையால்அவரது தலையில் அடித்துக் கொலை. செய்து இருக்கிறார். பின்னர், கணவனைக் கொலை செய்துவிட்டதாக ஜமுனாவே போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், கொலை வழக்கில் ஜமுனாவின் 14 வயது மகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்தனர். தொடர்ந்து ஜமுனா மற்றும் அவரது மகளை போலீசார் கைது செய்தனர். ஜமுனாவை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், சிறுமியைச் சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com