பெங்களூரு மெட்ரோ ரெயில்களில் அடிக்கடி கோளாறு: விரிவான விசாரணைக்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் உத்தரவு

பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா விடுத்த கோரிக்கையை ஏற்று ரெயில்வேத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பெங்களூரு மெட்ரோ
Published on

பெங்களூரு,

பெங்களூரு மெட்ரோ ரெயில்களில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு

பெங்களூருவில் மாதவரா முதல் சில்க் நிறுவனம் வரை பசுமை பாதையிலும், ஒயிட்பீல்டு முதல் சல்லகட்டா வரை ஊத நிற பாதையிலும். ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை மஞ்சள் பாதையில் 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மெட்ரோ ரெயில்களில் கடந்த சில நாட்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாயினர். இந்த தொழில்நுட்ப கோளாறுகளால் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த நிலையில் பெங்களூரு மெட்ரோ ரெயில்களில் ஏற்பட்ட கோளாறு மற்றும் சேவை பாதிப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரெயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் ஜனக்குமார் கர்க் உத்தரவிட்டு உள்ளார். பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா விடுத்த கோரிக்கையை ஏற்று ரெயில்வே துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு முதல் இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை மெட்ரோ ரெயில்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com