ஆபரேஷன் சிந்தூர்: உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட புதிய நம்பிக்கையை அளித்தது- பிரதமர் மோடி

சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
122வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை. ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியது. பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். நாடு தேசபக்தியில் மூழ்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியேந்தி பேரணிகள் நடைபெற்றன.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. இன்று ஒவ்வொரு இந்தியரின் லட்சியமும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். எல்லையைத் தாண்டி பயங்கரவாத முகாம்களை நமது படைகள் துல்லியமாக அழித்தன. உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.
யோகா தினத்துடன், ஆயுர்வேதத் துறையிலும் ஏதோ ஒன்று நடந்துள்ளது, அதைப் பற்றி அறிந்து நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். நேற்று, அதாவது, மே 24 அன்று, உலக சுகாதாரத்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் எனது நண்பர் துளசி பாய் (டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்) முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்துடன், சர்வதேச சுகாதார தலையீடுகளின் வகைப்பாட்டின் கீழ் ஒரு பிரத்யேக பாரம்பரிய மருத்துவ தொகுதிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி ஆயுஷ் அறிவியல் முறையில் உலகம் முழுவதும் அதிகபட்ச மக்களைச் சென்றடைய உதவும்.
பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் சர்க்கரை அளவுக்கான பலகைகள் வைக்கப்படுகின்றன. குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை உட்கொள்வதால் உண்டாகும் ஆரோக்கிய கேடு குறித்து பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.
65 வயதான ஜீவன் ஜோஷி பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் போலியோவால் பாதிக்கப்பட்டார், தொடர்ந்து போராடினார். அவர் தனது வாழ்க்கையை கலைகளுக்காக அர்ப்பணித்துள்ளார். அவரது பணி கலைகளுக்கு மட்டுமல்ல, பக்திக்கும் உரியது. வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதற்கு எடுத்துரைத்தார்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.






