பான் கார்டு முதல் கிரெடிட் ஸ்கோர் வரை.. புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்

Image Courtesy: Grok AI
புத்தாண்டில் சில முக்கிய மாற்றங்களை அரசு செய்துள்ளது.
2025-ம் ஆண்டு விடைபெற்றது. 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்துவிட்டது. காலண்டர் மட்டும்தானே மாறியுள்ளது. மற்றதெல்லாம் அப்படியேதான் இருக்கிறது என நினைக்க வேண்டாம். புத்தாண்டில் சில முக்கிய மாற்றங்களை அரசு செய்துள்ளது. குறிப்பாக நிதி சேவைகளிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படுள்ளன. என்னவெல்லாம் மாறியுள்ளது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* பான் - ஆதார் இணைப்புக்கு நேற்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி பான் கார்டு - ஆதார் இணைக்காதவர்களின் பான் கார்டு இனி செயலற்றதாகிவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் வருமானவரி செலுத்துவது, பெரிய அளவிலான வங்கி பரிமாற்றம் செய்வதில் சிக்கல் எழக்கூடும். எனவே, இணைக்காதவர்கள் அதற்கான அபராதம் செலுத்தி பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.
* வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் 15 நாள்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இதில் சில குளறுபடிகள் நேரிடுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இனி ஒவ்வொரு வாரமும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படும். எனவே, தவணை செலுத்தாதது, தவணை தாமதமாவது போன்றவை உடனுக்குடன் சிபில் ஸ்கோர் எனப்படும் கிரெடிட் ஸ்கோரில் அப்டேட் செய்யப்படும்.
*சமூக வலைத்தளங்களான வாட்ஸ்ஆப், டெலிகிராம், சிக்னல் போன்றவற்றுக்கு சிம் கார்டு வெரிபிகேஷன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தியும் எந்த செல்போனிலும் சமூக வலைத்தளங்களை இயக்கலாம். ஆனால், இனி வாட்ஸ்ஆப் போன்றவை அந்த சிம் கார்டு இருக்கும் செல்போனில் மட்டுமே இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
*2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்களில் மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இதுவரை 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலில் இருந்தன. 2025, டிசம்பர் 31ஆம் தேதியுடன் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் நிறைவுக்கு வருகிறது. எனவே, ஜனவரி 1 முதல் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இதனால் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பரிந்துரைகளை பொறுத்துதான் எவ்வளவு உயரும் என்று தெரியும்.






